தாமிரபரணி நதியில் மணல் அள்ளுவதற்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் மீதமிருக்கும் ஒரே ஜீவ நதியான தாமிரபரணியை ஈவு இரக்கம் இல்லாமல் ஒழித்துக் கட்டும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உயர் நீதிமன்றம் முன்வந்திருப்பதை இயற்கை ஆர்வலர்களும் அடுத்த தலைமுறைகள் மீது அக்கறை கொண்டவர்களும் மனதார வரவேற்கின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
கட்டுமான வேலைகளுக்கு கணிசமான மணல் தேவைப்படுகிறது. ஆற்றுப் படுகைகளில் அரசு குறிப்பிடும் இடங்களில் மணல் அள்ளி விற்பதன் மூலம் அந்த தேவை நிறைவேற்றப்பட்டது. பொருளாதார வளர்ச்சியால் எட்டுத் திசையிலும் பிரமாண்ட கட்டிடங்கள் எழத் தொடங்கியதில் இருந்து ஆறுகளில் மணல் அள்ளுவது பணம் அள்ளுவதற்கு சமமாக பெருந்தொழிலாக உருவெடுத்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அதே நதிகள், அதே மணல் வளம் இருந்துவரும் நிலையில் திடீரென தேவை எகிறினால் என்ன ஆகும்? வலிமை மிகுந்தவர்கள் தனி வழி வகுத்தார்கள். பொறுப்பான அரசுகள் கொண்டுவந்த அனைத்து கட்டுப்பாடுகளும் பகிரங்கமாக மீறப்பட்டன.
‘மணல் கொள்ளை’ என்ற பிரயோகம் குழந்தைகளும் புரிந்துகொள்ளும் அளவுக்கு புழக்கத்தில் வந்தது. திருட்டு மணலுடன் இருட்டில் செல்லும் லாரிகளை தடுக்க முயன்ற நேர்மையான அதிகாரிகள் வாகனங்களால் மோதி கொல்லப்பட்ட சம்பவங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்த்தின. எந்திரங்களை பயன்படுத்தி எந்த இடத்தில் வேண்டுமானாலும் சகட்டு மேனிக்கு மணல் அள்ளியதால் நீண்ட நெடிய வரலாற்று பெருமை மிகுந்த நதிகள் மூளியாக்கப்பட்டு சீர்குலைந்தன. தாமிரபரணியை பொருத்தவரை குடிப்பதற்கும் குளிப்பதற்கும் பாசனத்துக்கும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரே நதி. ஒருங்கிணைந்த நெல்லைச் சீமையின் நதிக்கரை நாகரிக பாரம்பரியம் உலகப் புகழ் பெற்றது. பல ஆண்டுகள் தொடர்ந்த போராட்டத்தின் விளைவாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தாமிரபரணியின் மறுபிறவிக்கு வழி வகுக்கும் என நம்பலாம்.
சனி, 4 டிசம்பர், 2010
பிழைத்தது ஜீவநதி
பிரிவு:
நாட்டு நடப்புகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக